இன்னொரு சத்திய சோதனை

 


இந்தியா அதிரத் தான் செய்தது…. ஆனால் நடந்தவை அந்த அதிர்வு பூகம்பம் மாதிரியான எதிர்மறை விளைவுகளை அன்னா ஹசாரேக்கு பின்னிருக்கும் நோக்கம் என்ன என்ற மிகப்பெரிய கேள்விதனை விட்டுச் சென்றுள்ளது… எனது சில எண்ணங்கள் …. சுற்றி இருக்கும் சில துர்சிந்தனையாளர்களால் யுவராஜின் அணுகுமுறைகள் பூமராங் ஆகிவிட, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க காங்கிரஸ் தடுமாறிக்கொண்டிருந்த நேரம்… அப்போது வந்த விஷயம், அன்னா ஹசாரே… காங்கிரஸ் இலகுவாக கையாண்டிருக்க வேண்டிய விஷயத்தை , காந்தி படப் பிண்ணனியில் நடத்தப்பட்ட கட்டப் பஞ்சாயத்தில், தோல்வி நிலைக்குப் போனது மத்திய அரசு…. இன்று இந்தியாவெங்கும் தலைவிரித்து ஆடும் லஞ்சம், ஊழல் நிச்சயம் களையப்பட வேண்டிய முக்கிய விஷயம் தான்… ஆனால், ஒரு தேசத்தின் சட்டத்தை ஒரு நாலு பேர் வரையறை செய்து பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டுவது ஏற்கக் கூடிய ஒன்று அல்ல… பி.ஜே.பி, கம்யூ என பல கட்சிகளிலும் காங்கிரஸிலும் நிச்சயமாக மனசாட்சிக்கும் தேசக் கடமைக்கும் கட்டுப்பட்ட பல உறுப்பினர்கள் உள்ளனர்…

இவர்கள் அங்கம் வகித்து அரங்கேற வேண்டிய சட்ட வடிவு விஷயத்தில், மக்கள் கருத்துப் பரிமாற்றம் , பாரளுமன்ற நிறைவேறல் என்று முன் எடுத்துச் செல்ல வேண்டிய விஷயத்தில், அரசிற்கு தவறான முன் யோசனை வழங்கியவர்களால் இன்று ஏதோ இந்தியப் பாராளுமன்றத்தை ஒரு தனிமனிதர் வென்றெடுத்தது போல் ஒரு தோற்றம்… இந்தியாவெங்கும் நடக்கும் லாரி வேலை நிறுத்தம், கூலித் தொழிலாளிகள் வேலை நிறுத்தம், பாங்க் பணியாளர்கள் வேலை நிறுத்தம் என பல போராட்டங்களுக்கு கிடைக்காத ஒரு முக்கியத்துவமும், வெற்றி பெற்றது போன்ற எண்ணமும் இன்று இதற்கு கிடைத்திருக்கிறது…. காரணம், ஜாதி, மத, இன , மாநில பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் விஷயமாக லஞ்சம் / ஊழல் இருக்கிறது… அதனால் கூட்டம் கூடியது….

அன்னா ஹாசாரே போராட்டம் இருளை நீக்க வந்த ஒளி என நினைத்து மெழுகவர்த்தி பிடித்தது, உண்ணாவிரதம் இருந்தது… ஆனால், அன்னா ஹசாரே போராட்டத்தின் உண்மைத் தன்மை…? அது கேள்விக்குறியதே….. அன்னா ஹசாரேயின் போராட்டம், லஞ்சம்/ ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம் என்ற தோற்ற வடிவு மட்டுமே கொண்ட, அதே சமயம் காங்கிரஸிற்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தி , வரும் பாராளுமன்ற தேர்தலில் காங் தோற்கடிக்கப்படுவதற்கான ஒரு குறிப்பிட்ட விவரமான வியூகமாகவே தெரிகிறது. முதலில், காங்கிரஸில் தவறான ஆட்கள் களையெடுக்கப்படாமல் இருப்பதன் காரணத்தை சோனியா / ராகுல் உணர்ந்து அதற்கு செயல்படா விட்டால் காங்கிரஸ் தடுமாறி விழும் என்பதில் ஐயமில்லை… காங்கிரஸை, அதனுள் இருக்கும் கறையான்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை இவர்களுக்கு உண்டு… காங்கிரஸை மக்கள் அடி வெறுக்கவில்லை என்பது, காங்கிரஸிலிருந்து விலகினாலும் காங்கிரஸ் அடையாளமுடன் வாழும் மம்தா பானர்ஜியின் வெற்றி… ஒரு சான்று… அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கான திட்டவடிவை விட, தோற்ற வடிவு மிக மிக புத்திசாலித்தனமாக வரையறை செய்யப்பட்டது… அதற்கு முக்கிய காரணம், ராம்தேவின் தோல்வி… காங்கிரஸிற்கு எதிராக, காங்கிரஸிற்கான மாற்று ஒரு “காவி”யால் தான் தர முடியும் என்று மக்களுக்கு உணர்த்தப்படவே, ராம்தேவ் களம் இறக்கப்பட்டார்…. ஆனால் அவரை திங்கள் காலையில் தூக்கியெறிந்த போது தேசம் அது பாட்டிற்கு சலசலப்போ அதிர்வோ இல்லாமல் இருந்தது… ஒரு அரசியல்வாதியை ”…நீ யோக்கியமா..?” எனும் போது, சாதாரண அரசியல்வாதி, “நீ மட்டும் யோக்கியமா..” என்று கேட்பது இயல்பு… அது பின்பற்றப்பட, ராம்தேவ் டிரஸ்டின் சொத்துக்கள் குடையப்பட்டது … அடங்கிப் போய் யோகா மன்னன் தியானம் பண்ணாமலே அமைதியாகிப் போனார்…. இந்தத் தோல்வியின் எபக்ஃட்டாகத் தான், அன்னா ஹசாரே தயார் செய்யப்பட்டார்… ஆம், காவி அடையாளம் தோற்றதால், கதரின் அடையாளத்தை திருடிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது…. இவர் தயார் ஆகிறார் என்று தெரிந்தும், எதிர்கட்சி கடைமையாற்ற வேண்டிய எந்த ஒரு கட்சியும் லோக்பால் மசோதாவிற்ற்கு எந்த வித முனைப்பும் காட்டவில்லை… அதில் விஷயம் இருந்தாலும், காங்கிரஸிம் கனன்று கொண்டிருக்கும் மக்கள் மனநிலையை ஏன் புரிந்து கொள்ளவில்லை… என்பதே.. ஆச்சரியம்… ஆரம்பத்தில், அன்னா ஹசாரே போராட்டத்தின் மீது துளிர் விட்ட நம்பிக்கை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அது போலிப் புரட்சி என்றே நிரூபணமாகியது… காங்கிரஸின் அடையாளமாக இருக்கும் ( நேரிடையாகவோ, மறைமுகமாகவோ… ) – – சுதந்திரப் போராட்டம்… – தேசியக் கொடி – உண்ணாவிரதம் – காந்திக் குல்லாய் இந்த நான்கு அடையாளங்களை காங்கிரஸிடமிருந்து பிடுங்கிச் செல்வதற்கான போராட்டமே இதுவன்றி, ஊழலுக்கும் ,லஞ்சத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை… இதன் ஆரம்பமாக, அன்னா ஹசாரே தன் குழுவினருடன் ராஜ்காட் சமாதியில் போய் தியானம் செய்தார்… குழுவினருடன் சேர்ந்து அமராமல், அவரெக்கென ஒரு துண்டு விரிக்கப்பட்டு தனித்து அமர்ந்தார்…. ஆம், இவர் தான் ஒட்டு மொத்த விளைச்சலையும் அறுவடை செய்ய வேண்டியவர் என்ற முடிவு செயல்வடிவம் பெற்ற இடம். இது மக்கள் இயக்கமல்ல… இந்தியாவெங்கும் காங்கிரஸை எதிர்க்க ஒரு அடையாளமாக இவர் வேண்டும் என்ற தீர்மானிப்பின் தொடக்கம் இது… அச்சமயம் முதலாக நடந்தது பார்த்தால், இது திட்டமிட்ட ஒரு பிராண்ட் புரமோஷனும், காங்கிரஸின் அடையாளத்தை களவாட நடந்த முயற்சியென்றும் தெளிவாகப் பிடிபடும்…. பின் அனைவரும் அன்னா என்று எழுதப்பட்ட குல்லாய் அணிந்தனர்… தேசிய கொடி ஏந்தினர்… மேடையில் மிகப் பெரிய அளவில் காந்தியின் திருவுருவம்… அதன் முன் உண்ணாவிரதம்.. காந்தி தெரியிறார், மேடையில் இருப்பவர் தெரியிறார்…. தொடர்ந்து மாறி மாறி தெரிய தெரிய காந்தி மறைந்து, அன்னா ஹசாரே, தேசியக்கொடி, உண்ணாவிரதம், சுதந்திரப்போராட்டம் அவர்தம் அடையாளமாக மாறுகிற நிலை… புரட்சி வராமலேயே… தோற்றம் மட்டும் வந்தது… காங்கிரஸிற்கு எதிரான திட்டம் வெற்றிப் பெறத் தொடங்கியது… வந்தேமாதரமும், இன்குலாப் ஜிந்தாபத்தும் ஒலிக்கத் தொடங்கின… அன்னா ஹசாரே பந்தலிலே… கிதாருடன் பாட்டு கச்சேரி களை கட்டியது… நாம் பெரிது மதிக்கும் கிரண்பேடி மோனோ ஆக்டிங் ஷோ நடத்தி மக்களை உற்சாகப்படுத்தினாரேயன்றி… காலகாலமாக தெருமுனை நாடகம் போடும் கூட்டங்கள் கிளர்தெழவில்லை…. அன்னா ஹசாரே பந்தலிலே… ஊழல் லஞ்சம் ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றிப் பேச்சு, பட்டிமன்றம் என்று எதுவும் நடக்கவில்லை…. கூத்து, தமாஷா கலை நிகழ்ச்சியாக நடக்கிறது… எந்தவிதமான என்.ஜி.ஓ க்களையும் அருகே வரவில்லை… பல சமூக சேவகர்கள் இவரிடமிருந்து ஒதுங்கிப் போக ஆரம்பித்தார்கள்.. நாடாளுமன்றத்திலே அங்கமாக இருக்கும் எதிர்கட்சிகள் லோக்பால் பற்றிப் பற்றி பேச ஆரம்பித்தன…. அத்வானி, சுஷ்மா, அருண் ஜெட்லி போன்றவர்களை முதலிலேயே காங்கிரஸ் கலந்து இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக காங்கிரஸில் இருக்கும் பலரை விட இவர்கள் மேலானவர்… மாற்றான் தோட்டத்து மல்லிகை இவர்கள்… அப்புறம் நடந்தது நீங்கள் அறீவிர்கள்… அன்னா தனது போராட்டம் வெற்றியடைந்தவுடன் ராஜ்காட் போவேன் என்று சொன்னது மாறி… நேரே ஹாஸ்பிட்டலுக்கு சென்றார்… 12 நாள் ரொம்ப தெம்பா இருந்தவர் ஒரு பத்து நிமிடம் காந்தி சமாதிக்குப் போகவில்லை…. இங்கே தான், இவர் மீதான சந்தேகம் முழுமை பெறுகிறது….. இனி காந்தியிடம் களவாட ஒன்றுமில்லை என்று புரிந்ததால் விடு ஜீட் என்றானார்… மேலும், அடுத்த போராட்டம் தேர்தல் சீர்திருத்தம், அது இது என்று ஒரு லிஸ்ட் போட்டார் பாருங்கள், அனைத்தும் உள்ளங்கை நெல்லிக்கனியானது… தொடர் போராட்டம் என்பது அரசியல்கட்சிகளின் தின வாழ்வு…. ஒரு விஷயத்தில் மாற்றம் கொண்டு வர நினைத்திருந்தால் ஏன் இந்த அணுகுமுறை…? அன்னா ஹசாரே, காந்தியின் அடையாளத்தை , காங்கிரஸின் பிராண்ட் விஷயங்களை திருடிவிட்டதாக, யாராவது பகற்கனவு கண்டால் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள ஒன்று இருக்கிறது…,

தமிழகத்தில், 50 வருடமாக நடிப்பு நடிப்பு என்று இருந்த நடிகர் திலகம் வி.சி.கணேசனுக்கு நடிப்புத் திறமையால் கிடைத்த சிவாஜி பட்டத்தை / அங்கீகாரத்தை , எந்த விதமான நாகரீகமும் இன்றி, …அப்பா …அப்பா… என்றழைத்துப் பின் அவர்தம் அடையாளத்தை திட்டமிட்டு ஒரு சினிமா டைட்டில் மூலம் திருடினார்கள்… அதுவும் எப்படி…? டைட்டிலில் , கறுப்பு வெள்ளையில் “சிவாஜி” என்று வரும் பெயரை இடித்து திரை வெளித் தள்ளி மாடர்ன் எழுத்துக்காளாய் “சிவாஜி” என்று பெயர் வரும்… அந்த சமயத்தில் பலரின் விழிகள் ஈரமானது… எந்த விதமான வீடியோ மீடியா இல்லாத காலத்தில், திருவருட்செல்வர், வீ.பா.க. பொம்மன், வ.வு.சி, மனநோயாளி, டிப்ரஷஸ்டு மனிதன், அவமானப்பட்டவன், குற்றாவாளி, கயவன், ஏமாளி, கோமாளி, நல்லவன், என்று விதவிதமாக பல கதாபாத்திரங்களை அற்புதமாகச் செய்தும், வயோதிக காலத்தில் முதல்மரியாதை, தேவர்மகன் என்றும் தொடர்ந்த நடிகர் திலகத்திற்கு செய்யப்பட்ட தீங்கு அது… அதற்கு எப்படி பிரபு, ராம்குமார் ,கமல், ஒத்துக் கொண்டார்கள் என்று இன்றுவரை புரியவில்லை… தற்போது தலைமுறைக்கு “சிவாஜி” என்றவுடன், பவுடர் மேக்கப், சோன்பப்படி விக்கும், டிஜிடல் எபஃக்டில் இளமையுமாய் ரஜினி ஞாபகம் வந்தாலும், இனி வரும் தலைமுறை அனைத்துமே… நடிப்பு பற்றி பேசும் போது, , “… அது இல்லடா… நான் சிவாஜின்னு சொன்னது .சிவாஜி கணேசனச் சொல்றேன்… அவரது இந்த இந்த படங்கள பாரு…” என்று சொல்வது தொடரும்…. ஆம், வேர்கள் ஆழமாய் விழுதுகளை காலத்தில் பரப்பி விட்டுச் சென்ற உன்னத நிலை அவர் கொண்டதால்…. இடர் வந்தாலும் அழிவில்லா உன்னத நிலையில்… அது போல் தான், காந்தியின் அடையாளத்தை திருடிவிட்டோம் என்று அன்னாவும், அவர் கூட்டமும் நினைத்தாலும், காந்தியின் மேன்மை அழியாது…. ”… கான மயிலாட கண்டிறிந்த வான்கோழி…. “ பாடல் தான் ஞாபகம் வருகிறது… ஒரு கேள்வி இவர்களிடம், – .. திருடாமல் நீங்கள் விட்ட ஒரு அற்புத சொத்து காந்தியிடம் உள்ளது… அது, – சத்திய சோதனை… – காங்கிரஸ் பழி வாங்கிறது என்ற பல்லவி பாடாமல், அன்னா ஹசாரேயும் அவர் தொண்டர்களும் சத்திய சோதனைக்கு உள்ளாக வேண்டிய நேரமிது…. செய்வார்களா…? மக்களுக்கு ஒரு வார்த்தை… நிச்சயம் உண்மை புரட்சி இந்த தேசத்தில் வரும்… அதுவரை போலிகளை கண்டு புழாங்கிதம் அடைந்து ஏமாறாதீர்கள்… செய்வார்களா…? காங்கிரஸிற்கு ஒரு வார்த்தை… காந்தியின் கோமணமும் களவாடப்படும் முன் காங்கிரஸின் மானம் காக்க காங்கிரஸார் சரியான ஆலோசகர்களை கொண்டு செயல்பட வேண்டும்….

காந்தியின் அடையாளமும் சுதந்திரப் போராட்டத்தின் உன்னதமும், தேசியக் கொடியின் மேன்மையும் , காந்தி குல்லாயின் உச்சமும், நிலை நிறுத்தப்பட வேண்டிய தலையாய கடமை காங்கிரஸிற்கு இருக்கிறது… காங்கிரஸ் முழுதான சத்திய சோதனைக்கு தன்னை ஆட்படுத்தி ஒரு நல்ல அரசையும், திட்ட வடிவுகள், காலத்திற்கு உகந்த சட்ட மாறுதல்கள், ஆர் டி ஐ போன்ற பகுதிகள் மக்களுக்கு முழுதாய் பயன் தருவதற்கான முயற்சி என இறங்க வேண்டும்… செய்வார்களா….?

Advertisements

One thought on “இன்னொரு சத்திய சோதனை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s