தாய்ப்பசு

Painted+cow.jpg

பட்டணத்துப் பால்காரன் மாடசாமியின் வீட்டு பசுமாடு ஒரு காளைக் கன்றுக்குத் தாயாகி இருந்தது. பசுவுக்கு இது இரண்டாவது ஈற்று. முதலில் பிறந்த கிடாரிக் கன்று வளர்ந்து பெரிதாகி எங்கோ கைமாறிப் போய்விட்டது. இப்போது இது இரண்டாவது குழந்தை; ஆண்குழந்தை அது அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தது.
தாய்ப்பசுவுக்குப் பெருமை தாங்கவில்லை. மடி நிறையப் பால் சுரந்திருந்தும்கூட, அதைக் குடிக்காமல், இப்படி முட்டி மோதிக்கொண்டு எந்தப் பிள்ளையாவது விளையாடித் திரியுமா?
சீம்பாலைக் கறந்து விற்க முடியாது என்பதால் மாடசாமியும் கன்றுக் குட்டியைப் பிடித்துக் கட்டி வைக்கவில்லை. குடித்தால் குடித்துவிட்டுப் போகட்டுமே என்கிற தாராளம்.
கன்றுக்குட்டிகோ நினைத்தபோதெலலாம் குடித்துக்கொள்ளலாமே என்ற ஒரு அலட்சியம். அதற்கு ஒரு தோழனும் கிடைத்தவிட்டான்; மாடசாமியின் மகன் குமரன். முதலாளியின் மகனும் தன்மகனும் ஒன்றாய்க் குலவுவதைக் கண்ட தாய்ப்பசு. பெருமையோடு அதைத் தன் துணைவனுக்குச் சுட்டிக் காட்டுவதற்கு அடுத்த வீட்டுப் பக்கம் திரும்பியது.
அடுத்த வீட்டு காளைதான் அந்தப் பசுவுக்குத் துணை; அதன் குழந்தைகளின் தகப்பன். அந்தச் செவலைக் காளையும் அப்போது துள்ளிக் குதிக்கும் தன் கன்றுக்குட்டியைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. “பார்த்தாயா உன் மகனை. உன்னைப் போலவே பிறந்திருக்கிறான்!” என்று பசு தன் கண்களால் பேசிய பேச்சை அது புரிந்து கொள்ளாமல் இல்லை.
காளைக்கன்று ஒடியாடித் திரிந்து விட்டுத் தன் தாயின் அருகில் வந்து நின்றது. அதன் தோழனான குமரனும் கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பசுவின் அருகில் வந்தான். பசு இருவரையும் மாறி மாறிப்பார்த்தது. இரண்டு குழந்தைகளுமே தன் குழந்தைகள் என்பது போல் நாக்கால் குமரனையும் கன்றுக் குட்டியையும் மாறி மாறித்தடவிக் கொடுத்தது.
ஒரு வகையில் பார்க்கப்போனால் குமரனும் தாய்ப் பசுவின் குழந்தைதான். மாடசாமியின் மனைவி அவனைப் பெற்றுவிட்டாளே தவிர. அவனிடம் பிள்ளையை வளர்ப்பதற்குப் பால் இல்லை. பசுவின் பால்தான் இப்போது அவனுடைய தேகத்தில் ஓடும் இரத்தம்.
இரண்டு மூன்று நாட்கள் சென்றன.
காளைக் கன்றுக்குட்டிக்குக் கழுத்துச் சங்கிறீயோடு வாய்ப்பூட்டான கூடையும் கிடைத்தது. நினைத்த நேரத்தில் பால் குடிக்க முடியவில்லை.
பால் கறக்கும் நேரத்தில் மட்டும் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிடும் மாடசாமி சரியாகப் பால் கரந்து அதன் வாய்க்கு வரும் நேரத்தில் அதை இழுத்துப் பிடித்துக் கட்டி விட்டுக் கறக்கத் தொடங்கிவிடுவான். அவன் கறந்து முடித்துவிட்டு அவிழ்த்து விடும்போதோ மடியில் ஒரு சொட்டுப்பால் கூடமீதமிருக்காது.
கன்றுக் குட்டி முட்டிப் பார்க்கும்; மோதிப்பார்க்கும் கதறிப் பார்க்கும். இந்தத் துடிப்பைக் காணும் அடுத்த வீட்டுக் காளையோ தன் அடித் தொண்டையி-ருந்து குரல் எழுப்பும்; குறுக்கே நிற்கும் சுவரில் தன் கொம்புகளை அது மோதுவதும் உண்டு.
தாய்ப்பசுவுக்கோ இந்த வேதனைகளைத் தாங்கவே முடிவதில்லை. அதனால் என்ன செய்யமுடியும்?

கன்றுக் குட்டியின் கன்னங்கரிய பெருவிழிகள் இரண்டும் ஒளி இழந்து வந்தன. அதனால் துள்ளவும் முடியவில்லை; குதிக்கவும் முடியவில்லை. தளதளவென்று சதைப் பிடிப்போடு
இருக்கவேண்டிய மேனியில் எலும்புக் கூடு புறப்படத்தொடங்கியது.
கன்று தாயை ஏக்கத்தோடு பார்க்கும்; தாய் ஏக்கத்தோடு கன்றைப் பார்க்கும். இரண்டையையும் சேர்த்துப் பார்க்கும் அடுத்த வீட்டுக் காளையோ. மூச்சுவிடுவதற்குப் பதிலாக நெருப்புக் கனலைக் கக்கும்.
இந்தச் சமயத்தில்தான் ஒருநாள் மாடசாமி வழியில் போய்க் கொண்டிருந்த மற்றொரு பால்காரனைக் கூப்பிட்டு அவனோடு ஏதோ பேச்சுக் கொடுத்தான். அந்தப் பால்காரனின் தோளிலும் ஒரு கன்றுக்குட்டி இருந்தது. ஆனால் அது உயிரில்லாத கன்றுகுட்டி. தோலை உரித்து உள்ளே வைக்கோலைத் திணித்து. ஏதோ குச்சிகளை வைத்துக் கட்டி சோளக் கொல்லைபொம்மை போல் ஒரு உருவத்தை வைத்துக்கொண்டிருந்தான் அவன்.
“மாடசாமி! கிடாரிக் கண்ணுக்குட்டியா இருந்தாலும் பரவாயில்லை. வளர்த்தாலும் நாளைக்குப் பால் கொடுக்கும். நல்ல விலைக்கு யாரும் கேட்டாலும் கொடுத்திடலாம். இதை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறே?” என்ன செய்யறதுன்னுதான் எனக்கும் புரியலே. ஒரு நாளைக்கு இதுவே
ஒரு படிப்பாலைக் குடிச்சிடும் போலே இருக்கு!”
மாடசாமியின் பேச்சைத் துளிகூட நம்பாத அந்தப் பால்காரன் கலகலவென்று சிரித்தான்.
“செய் செய் நான் எதைச் செய்தேனோ அதைத்தான் நீயும் செய்துகிட்டுவர்றே! துணிஞ்சு செய்! இன்னும் ஒரு வாரம் இப்படியே செய்தீன்னா தன்னாலே எல்லாம் சரியாப் போகும்!” சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே அவன் போய் விட்டான்.
“மனிதர்களையும் சரி. மிருகங்களையும் சரி. வயிற்றில் அடித்துப் பட்டினிபோட்டு அணுஅணுவாகக் கொன்றால் அதைத் தடுப்பதற்கு எந்தச் சட்டமுமில்லை” என்று அவன் மறைமுகமாக உபதேசம் செய்துவிட்டுக் கிளம்பி விட்டான்.
ஒரு வாரம் கூடத் தாங்கவில்லை. ஒரு நாள் காலையில் கன்றுக் குட்டியின் முகத்தில் ஈக்கள் மொய்த்தன. அதை எங்கோயோ இழுத்துக் கொண்டு போய்விட்டான் மாடசாமி.
சில தினங்களுக்குள்ளாகவே தாய்ப்பசுவுக்கு முன்னால் ஒரு வைக்கோல் அடைத்த கன்றுக் குட்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான் அந்தப் பால்காரன்.

பசுவின் மடியும் பால் சுரந்தது; கண்களில் நீரும் வழிந்தது; அது கதறிய கதறலுக்கு. சுவருக்கு அப்பால் நின்ற காளைமாடும் எதிரொலி கொடுத்தது.
தைப்பொங்கல் வந்தது. மனிதர்கள் சாப்பிட்ட மறுநாள் மாட்டுக்காகவும் பொங்கல் வைத்தார்கள்.
அடுத்த வீட்டுக் காளைக்கு அதன் சொந்தக்காரன் கொம்பு சீவிவிட்டு. அலங்காரங்கள் செய்து வைத்து. அதைத் தட்டிக் கொடுத்து ஊர் சுற்ற அனுப்பி வைத்தான். கிராமத்தில் அது இருந்தபோது மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு ஊரையே கதி கலக்கிய காளை. பட்டணத்திற்கு வந்த பிறகு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. பார வண்டி இழுப்பதோடு சரி.
அந்தக் காளைமாட்டுக்கு மஞ்சு விரட்டு நினைவு வந்து விட்டது. அந்த நினைவோடு சுவருக்கப்பால் நின்ற பசுவை எட்டிப்பார்த்தது. பசு தனக்கெதிரில் வைத்த பொங்கலை முதலில் முகர்ந்து பார்த்துக் கண்ணீர் வடித்தது; பிறகு தன் கொம்புகளால் அந்தப் பாத்திரத்தையே மோதிக் கீழே உருட்டி விட்டது.
மாடசாமிக்கு ஒன்றும் புரியவில்லை அருகில் நின்ற அவனுடைய மகனுக்கும் ஒன்றும் புரியவில்லை. மாடசாமி பசுவின் கழுத்தில் அன்போடு தட்டிக்கொடுத்துப் பார்த்தான். அதன் முகத்தில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். மறுபடியும் சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்து அதன் அருகில் கொண்டு வந்தான்.
இந்த வேளைகளுக்கிடையில் அவனுடைய மகன் குமரன் சற்று விலகிப் போய் விளையாடியதை அவன் கவனிக்கவில்லை.
திடீரென்று ஏதோ ஓரு பரப்பரப்பான சத்தம் கேட்டது. நாலுகால் பாய்ச்சல் தெருவே அதிரும் ஓசையுடன் அடுத்த வீட்டுக் காளை அங்கே வந்துகொண்டிருந்தது. சீவி விட்ட கொம்புகள் மின்னல் கீற்றுகளைப்போல் ஒளிர்ந்தன. கண்களில் நெருப்புப் பொறிகள் பறந்தன.
தரையைக் குத்திக் கிளறி ஒவ்வொரு கொம்பிலும் ஒவ்வொரு பிடி மண்ணைச் சுமந்துகொண்டு. அது அடுத்த பாய்ச்சலுக்கு மாடசாமியின் மகன் குமாரனைக் குறி வைத்தது.
மாடசாமி வெடவெடத்துப் போனான். மகனைக் காப்பாற்றப் போனால் தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளமுடியாது என்ற பயம் வந்துவிட்டது அவனுக்கு. குலை நடுக்கத்தில் ஏதோதோ உளறிக்கூக்குரலிட்டான்.
நொடிப்பொழுதில் என்னென்னவோ நடந்து விட்டது.
தாய்ப்பசு முளைக் கயிற்றை அறுத்துக்கொண்டு. நாலு கால் பாய்ச்சல் போய்க் குமரனுக்கும் காளை மாட்டுக்கும் இடையில் நின்றது. காளைமாட்டின் கொம்புகள் அதன் கழுத்தில் பாய்ந்தன. குறுக்கே விழுந்த பசுவைக் கண்டவுடன் காளையின் சீற்றம் பசுவின் பக்கம் திரும்பியது. அது அலறிய அலறலில் “கொலைக்குக் கொலை! பழிக்குப் பழி” என்ற ஆவேசம் குமுறியது.
தாய்ப்பசுவும் பதிலுக்கு அதைப் பார்த்துக் கதறியது. “சீ! நீ என்ன.மனிதனைப் போல் கேவலமாய் நடந்து கொள்கிறாய்? குமரனும் என்பால் குடித்து வளர்ந்தவன்!…. உனக்கு ஏன் இவ்வளவு வெறி வந்துவிட்டது?” என்ற ஆத்திரத்தோடு கதறியது.
மனிதனான மாடசாமிக்கு எதுவுமே புரியவில்லை! மாடுகள் புரிந்துகொண்டு கண்ணீர் வடித்தன.

அகிலன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s