கே.பி. சுந்தராம்பாள்

k.b.sundarambal2.jpg

இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில்
பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில்
வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை
கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ்.
பாடிய பாடல்களுக்குத்தான்.
இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம்
கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப்
பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர். “15 வயதுக்குள்ளாகவே சுந்தராம்பாள்
‘அயன் ஸ்திரிபார்ட்’ பதவிக்கு வந்துவிட்டாராம். இது ஆச்சரியம்தான். நாடக
மேடையில் இத்தகைய ‘பிரமோஷன்’ யாருக்குமே இருந்ததில்லை” என்கிறார் வ.ரா.
கந்தர்வ கான செங்கோட்டை இசைச் சிங்கம் கிட்டப்பாவை அந்தக் காலத்திலேயே
சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். இவர்கள் இருவரும் தமிழ்கூறு
நல்லுலகம் முழுவதும் சென்று தமிழ் நாடகத்தை உயிர் பெறச் செய்தார்கள்.
ஈடுஜோடு இல்லாத பெருமை
“இவருடைய பெயர் தமிழ்நாடெங்கும் பரவச் செய்தது, இவர்களுடைய அபாரமான
சங்கீதக் கலையே. நல்ல ராக-தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய
சங்கீதத்தில் ஈடுஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்கவாத்தியம் இல்லாமலேயே
மிகவும் இனிமையாகப் பாடும் திறமையாம். அநேக சங்கீத வித்வான்கள்
பக்கவாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்கவாத்தியம்
இல்லாமல் பாடுவது வேறு மாதிரியாக இருக்கும். இவரது பாட்டில் அப்படி
இல்லை. பக்கவாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாக
இருக்கும். இது ஒரு அரிய குணம்” என்கிறார் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த
முதலியார்.
கச்சேரிகளில் கே.பி.எஸ். பாடி மக்களிடம் வரவேற்பு பெற்ற பல பாடல்கள்,
பின்னர் இவர் நடித்த நந்தனார், மணிமேகலை, ஒளவையார், திருவிளையாடல்,
கந்தன் கருணை, முதலிய படங்களில் பயன்படுத்தப்பட்டன. மேலே கண்ட படங்களைத்
தவிர, மகாகவி காளிதாஸ், பூம்புகார், உயிர் மேல் ஆசை, துணைவன், காரைக்கால்
அம்மையார், சக்திலீலை, திருமலை தென்குமரி முதலிய விரல் விட்டு
எண்ணக்கூடிய படங்களில்தான் நடித்தார். நாடக நடிப்பும் பாட்டும், தேச
விடுதலைக்காக கே.பி.எஸ். பாடிய பாடல்களும்தான் அவரை மக்கள் மத்தியில்
கொண்டுசென்றது.
கே.பி.சுந்தராம்பாளுக்குக் கிடைத்த குரல் ஒரு வரப்பிரசாதம். இது போன்ற
ஒரு குரல் தமிழக இசை வரலாற்றில் யாருக்கும் கிடையாது. பாடும் வல்லமையை
அவர் தனக்குத் தானே வளர்த்துக்கொண்டார். விருத்தங் களை ராகமாலிகைகளில்
பாடிப் புகழ் பெற்றவர் திருச்செந்தூர் சண்முகவடிவு. அவரிடமிருந்தே
இம்முறையை கே.பி.எஸ். கற்றார்.
நாலரைக் கட்டை ஸ்ருதி
கே.பி.எஸ். நாலரைக் கட்டை ஸ்ருதியில் பாடுவது வழக்கம். உச்சஸ்தாயியில்
பாடலின் சிறப்பான வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு அசக்கு அசக்குவது
இவர் பாணி. அப்படி அசக்குவதிலேயே பிருகாக்கள் வெடிக்கும். பொதுவாக,
பாடகர்கள் மெல்ல மெல்ல முயன்று உச்சஸ்தாயியில் நிலைகொள் வார்கள். இவரோ
எடுத்த எடுப்பிலேயே அந்த இடத்துக்குச் சென்றுவிடுவார். இதற்குக் காரணம்,
நாடக மேடைதான். ஒலிபெருக்கி இல்லாத அந்தக் காலத்தில், நாடகத்துக்கு
வந்திருக்கும் கடைசிப் பார்வையாளருக்கும் கேட்க வேண்டும் என்கிற சூழல்.
அதனால்தான் நாடகப் பாடகர்கள் பைரவி, கேதாரம், காம்போதி முதலிய ராகங்களை
எடுத்துக்கொள்வார்கள். அவை உரத்து, நாடகத்தின் இயல்பைப்
பார்வையாளனுக்குத் தொற்ற வைக்கும். “கே.பி.எஸ். அந்தக் காலத்தில்
கும்பகோணத்தில் நாடகத்தில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு மைல் தூரம்
கேட்கும்” என்கிறார் நடிகர் சாரங்கபாணி.
பழைய நாடகப் பாடல்களை இன்று கேட்கும்போது, என்ன வார்த்தை என்பதே
புரியாது. கே.பி.எஸ். பாடலில் மட்டும்தான் சொல் சுத்தம், பொருள் தெரிந்து
பாடும் அழகைக் கேட்க முடிகிறது. பாட்டுக்குக் காலப்பிரமாணம் முக்கியம்.
அது கே.பி.எஸ்ஸுக்குக் கைவந்த கலையாக இருந்தது.
குடம்குடமாகச் சொல் மகுடங்கள்
“இசையரங்குகளில் மரபாக முதலில் வர்ணம் பாட வேண்டும். ஆனால், வர்ணத்தைப்
பாடாமல், அதற்கு நிகராக வர்ணத்தில் உள்ள பண்சுவை மிக்க இசைச் சுர
அமைப்புகளையும் ‘ததிங்கிணத்தோம்’ வைக்கும் தாள முத்தாய்ப்பு
அமைப்புகளையும் இனிய செந்தமிழ்ச் சொல் மகுடங்களாகவே அமைத்துக் காட்டி
மகிழ்ச்சியூட்டுவார். இது போன்றே கற்பனைச் சுரங்கள் பாடுமிடத்திலே
சொல்மகுடங்களைக் குடம் குடமாகப் பொழிந்து, துள்ளல் இசையைத் துய்க்கச்
செய்வார்” என்று வி.ப.க. சுந்தரம் கே.பி.எஸ்ஸைப் பற்றிச் சொல்வார்.
அகர, இகர, உகர ஒலிகள் மூலமாகப் புதுப் படைப்புக் கோவைகள் போன்ற அமைப்பைக்
காட்டிக் களிப்பூட்டுவார். ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்கிற போது ‘ஞா’வை
நீட்டிப் பாடுவதையும் ரசம் என்று பாடும்போது நீட்டாமல் குறுக்கிப்
பாடுவதையும் கேட்டுப்பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.
800 பாடல்கள்
இதுபோல் கே.பி.எஸ். சுரம் பாடி அழகு சேர்த்த பாடல்கள் வரிசையில் இந்தப்
பாடல்களையும் சொல்லலாம்: ‘மனக்குறை ஏது முருகா?’, ‘தத்துவம் என்ன
சொல்லுவாய்?’, ‘தனித்திருந்து வாழும் மெய்த் தவமணியே’, ‘ஆடிக்கொண்டார்
அந்த வேடிக்கை காண’. இந்தப் பாடல்களில் பழைய காலப் பாடும் முறையை
கே.பி.எஸ். அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். விருத்தத்தின் அழகையும்
பாடும் முறையையும் சங்கரதாஸ் சுவாமிகள் பாடல்கள், திருச்செந்தூர்
பிள்ளைத் தமிழ், சுப்பிரமணிய பதிகம், முதலியவற்றின் பாடல்களில்
ரசிக்கலாம். பல பாடல்களை கே.பி.எஸ். தானே இயற்றியும் பாடியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 800 பாடல்கள் கைவரப்பெற்றிருந்தார். இசைத்தட்டுக்களில்
இதுவரை 250 பாடல்கள் கிடைத்துள்ளன.
கே.பி.எஸ். இசை நிகழ்ச்சி குறைந்தது 6 மணி நேரம் நடக்கும். தஞ்சை,
கும்பகோணம், சிதம்பரம், முதலிய ஊர்களில் பாடும்போது மட்டும் ராகம்,
தாளம், பல்லவி, ஆலாபனை, லய விந்நியாசம் எல்லாம் முடிந்த பின்னர்தான்
திரைப்படப் பாடல்களுக்கு வருவார். கச்சேரியில் மற்றவர்கள் பாடாத ராகங்களை
எடுத்து வைத்துக்கொண்டு, அந்த ராகங்களுக்கு அழகைக் கொடுத்துக்
கச்சேரியைக் களைகட்டச் செய்வார்.
இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி,
இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர்
கே.பி.எஸ்-தான். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, அடுத்த பாடலைக் கேட்காமல்
சென்ற ரசிகர் யாருமே கிடையாது. கச்சேரி முடியும் வரை தமிழிசை என்ற மாயக்
கயிற்றுக்குள் கட்டிப் போட்டுவிடுவார். எனவே, தமிழின் உச்சஸ்தாயி
என்றுதான் கே.பி.எஸ்ஸைச் சொல்ல வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s