இராதாகிருஷ்ணன்

முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் (1888 –
1975) பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது கூட்டிணைவுடைய ஒரு சொற்கூறு:

அரசியல் மேதை – தத்துவஞானி. சென்ற நூற்றாண்டில் இந்து சமயத்தை ஒரு
தனியாளின் பணித்திட்டமாக, முக்கியமாக மேற்குலகிற்கு
அறிமுகப்படுத்துவதிலும், அந்த மதம்மீதான அவர்களின் அவதூறுகளைத்
திருத்துவதிலும் மிக மும்முரமாயிருந்தார். அவருடைய காலத்தில் வேறு
இந்தியர்கள் இந்து மத மீளுருவாக்கத்திற்காக உழைத்தாலும்
இராதாகிருஷ்ணனிடம் இருந்த கெட்டித்தனமும், பலமான அறிவியல்
எண்ணப்படிவமும், தத்துவ ஞான விரைவூக்கமும், மதங்களில் அவருக்கிருந்த
கூர்மையான அறிவுத்திறனும், அவரின் வாசக தோழமையான எழுத்துநடைப் பாணியும்
அவரை மற்றவர்களிடமிருந்து சற்று வேறுபடுத்தின. அவர் எழுதிய
கட்டுரைகளையும் நூல்களையும் பட்டியல்படுத்தினால் நீங்கள் படித்துக்கொண்டி
ருக்கும் இந்த காலச்சுவடு இதழில் பட்டுச்சேலை விளம்பரங்களுக்கும்கூட இடம்
இருக்குமோ தெரியாது. இராதாகிருஷ்ணன் என்னதான் பல புத்தங்களை
எழுதியிருந்தாலும் அவரின் முதல் எழுத்தான Essentials of Psychology (
London: Oxford University Press, 1912) வெளியிடுவதில் ஒக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகப் பிரசுரம் கொஞ்சம் தயக்கம் காட்டியது. அதுமட்டுமல்ல,
பிரதிபற்றிய அச்சகத்தின் குறிப்பில் கொஞ்சம் இனவாதமும் ஆங்கில ஆணவமும்
காணப்பட்டது. மறைமுகமாகப் பிரசுரம் எழுப்பிய கேள்வி; ஒரு கண்ணியமான
அச்சகம் வெளியிடுவதற்கான பாண்டித்தியம் இந்த நூலில் இருக்கிறதா?
இராதாகிருஷ்ணனின் இலக்கியத் திரட்டுகளில் இந்நூல் அதிகம்
கவனிக்கப்படாததொன்று. இதன் பிரதியை அவர் சமர்ப்பித்த போது அதிகம்
அறியப்படாத விரிவுரையாளராக இருந்தார். ஒருவரியில் இந்த நூலைப் பற்றிச்
சொல்வ தானால் Freudக்கு முந்திய மனவியல்பற்றிய சாத்திரம்.
இராதாகிருஷ்ணனை பலரும் அறியவைத்த சம்பவம், அவர் சென்னை கிறிஸ்தவக்
கல்லூரியில் படித்தபோது முதுகலைப் பட்டத்திற்காக எழுதிய ஆராய்ச்சிக்
கட்டுரை. அதன் தலைப்பு: ‘The Ethics of the Vedanta and Its Metaphysical
Presuppositions’. இந்த ஆய்வேடு அந்தநாட்களில் அவருக்கு கீதைபற்றிய பாடம்
எடுத்த A.G. Hogg கருத்துகளுக்குப் பதில் அளிக்க எழுதப்பட்டது. இந்த
மதப்பிரசங்கியார் தன் வகுப்புகளில் இந்துமதத்தைக் குறைவுபடுத்தி,
கேவலமாகத் தன்னொறுப்பு சார்ந்த, உலகைவிட்டு ஒதுங்கிவாழ்கிற சந்நியாசித்
தன்மையானது என்று சொன்னார். கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் உருவாக்கிய
இந்துமதம் பற்றிய பொய்யாக்கங்களும், இந்து சித்தாந்தம் பலவீனமானது
என்றும் அவர்கள் அம்பலப்படுத்தியது இராதாகிருஷ்ணனைத் தளர்ச்சியடையச்
செய்தது. இந்து மதம் அறிவாற்றலில் உன்னதத் தரமானது, ஒழுங்குநெறியில்
நேர்த்தியானது, காரிய சாத்தியமானது என்று அவருடைய முதுகலை ஆய்வேட்டில்
நிரூபித்தார். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது எந்த ஆங்கில
விரிவுரையாளர்களின் இறையியல் கோட்பாடுகளை எதிர்த்தாரோ அவர்களே இவருக்கு
மேற்பார்வையாளர்களாக இருந்து ஆராய்ச்சிக்கு உதவினார்கள். இவ்வளவுக்கும்
ஆங்கிலேயரையும் கிறிஸ்துவத்தையும் தாக்கி எழுதியிருந்தார். பச்சையான
மாமிசம் அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த நாட்களில், ‘‘அன்றியும் சகோதரன்
சகோதரனையும் தகப்பன் பிள்ளைகளையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்’’
என்று கடுப்பாக, உறுத்தலாக இயேசு சொன்ன காலகட்டத்தில் இந்தியாவில் மிக
நுணுக்கமான ஆறு தத்துவங்கள் உருவாக்கப்பட்டன என்று எழுதியிருந்தார்.
இந்தப் பட்டதாரிக் கண்காணிப்பு, இன்றைய எளிதிற் புண்படக்கூடிய இந்திய
பல்கலைக்கழகச் சூழலில் நடக்கக்கூடிய காரியமல்ல. இந்த ஆய்வுக் கட்டுரையை
ஒரு குறிப்பிட்ட அளவு பிரதிகளாக சென்னை ‘The Guardian Press’ 1908இல்
வெளியிட்டது. ஆராய்ச்சியாளர்கள் தேடும் சேகரிக்கும் அரிதான அரும்பொருளில்
இந்தப் பிரதியும் ஒன்று. இது சுலபமாக e-bayயில் கிடைக்கக்கூடிய
காரியமல்ல.
நடிகர்களிடம் கேட்கும் வீணான, உபயோகமற்ற கேள்விகளைத் ‘தந்த மாளிகையில்’
வசிக்கும் வறண்ட தத்துவஞானிகளிடமும் கேட்பதுண்டு. அவருக்குப் பிடித்தமான
நூல்கள் எவை என்று கேட்டபோது கிறிஸ்தவ திருமறை, சேக்ஸ்பியரின் திரட்டு,
இம்மானுவல் காண்டின் எழுத்துகள் என்று கூறினார். அவருடைய மகன் கோபால்
தன்னுடைய தந்தைபற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்றில் தன் தந்தை இந்து மதம்,
இந்தியரைப்பற்றிச் சிந்திக்கவைக்க இருவர் காரணமாக இருந்தார்கள்
என்கிறார். இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக இருந்த சுவாமி
விவேகானந்தரின் கருத்துகள்; மற்றது தேசத்தையும் தர்மத்தையும் பற்றிய
சாவர்க்கரின் சிந்தனைகளைத் தாங்கிவந்த ‘The Indian War of Independence’.
கள்ளத்தனமான சுற்றோட்டத்தில்தான் இந்த நூலை இராதாகிருஷ்ணன் வாசிக்க
முடிந்தது என்று கோபால் எழுதியிருக்கிறார்.
வெள்ளைக்காரன்தான் நம் எல்லோரையும் பிராமணன் – சூத்திரன் என்ற ஒற்றைச்
சமயக் கட்டுப்பாட்டுக்குள் பூட்டினான் என்று காஞ்சி காமகோடி
சங்கராச்சாரியார் விசனப்பட்டதாக முத்துமோகன் அவருடைய சமீபத்திய
கட்டுரையில் நினைவுபடுத்தியிருந்தார். வெள்ளைக்காரன் மட்டுமல்ல
இராதாகிருஷ்ணனும் அதைத்தான் செய்திருந்தார். ஹிந்து மதத்தின் பன்முகத்
தன்மையான சமய நடத்தைகள், மழுங்கலான நம்பிக்கைகள், பொருளற்ற விழாக்கள்,
பயனற்ற விரதங்கள், குழப்பமடையச் செய்யும் உருவ வழிபாடுகள்,
திகைக்கவைக்கும் தெய்வங்கள், தடுமாறச் செய்யும் தத்துவங்கள்,
அலுப்பூட்டும் ஆலய ஆச்சாரங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து,
இந்துமதத்தின் இசகுபிசகுகளை நீக்கி, அவற்றைத் துப்புரவுப்படுத்தி
அத்துவைத வேதாந்தம் என்ற ஒருமைவடிவ சட்டகத்துக்குள் இராதாகிருஷ்ணன்
சேர்த்தார். வேதாந்தம் மதமல்ல, இயல்பாகப் பல சமயங்களுக்கும் உரித்தாகக்
கொள்ளத்தக்கப் பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம் என்றார். ‘The
Vedanta is not a religion, but religion itself in its most universal
and deepest significance.’ எல்லோருக்குமான, உலக முழுதளாவிய
முழுநிறைக்கூற்று என்று அத்துவைத வேதாந்திக்கு மறுஉருவங்கொடுத்தார்.
சமஸ்கிருதப் பிரதிகளான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதையில்
தான் இறை உண்மை உரைக்கப்பட்டிருக்கிறது; மற்றைய மதவேதங்கள், ஏனைய மறைகள்,
ஆகமங்கள் சுமப்பவை அத்துவைத வேதாந்தத்தின் தொடர் பேரொலி, resonance
என்பது இராதாகிருஷ்ணனின் கணக்கீடு. உதாரணத்திற்குப் பழைய ஏற்பாட்டு
நீதிமொழிகளில் காணப்படும் ‘‘மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த
தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம்
ஆராய்ந்துபார்க்கும்’’, மற்றும் தூய பவுலின் ‘‘நீங்கள் தேவனுடைய
ஆலயமாயிருக் கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில்
வாசமாயிருக்கிறாரென்றும் அறியா திருக்கிறீர்களா?’’ என்ற வாசகங்கள்
சமஸ்கிருத வேதங்கள் சொன்ன ‘நீ அதுவாய் இருக்கிறாய்’ (‘Tat Tvam Asi’,
That art Thou) என்பதின் சிறிது திரிபுற்ற வரிகள் என்றார்.
சமஸ்கிருதமல்லாத மற்றைய இந்திய நாட்டுமொழிகளின் திருப்பிரதிகள் அத்துவைத
வேதாந்தத்தின் பிரதிபிம்பமே. சைவ வேதங்களை இவர் கணக்கில் எடுக்கவில்லை.
இராதாகிருஷ்ணன் இந்துமதம் பற்றி மட்டுந்தான் எழுதினார் என்பது சிவாஜி
கணேசன் ‘பராசக்தி’ படத்தில் மாத்திரந்தான் நடித்தார் என்று சொல்வது
போன்றது. அவருடைய எழுத்துகளில் அதிகம் கவனிக்கப் படாததொன்று கிறிஸ்தவம்
பற்றிய அவருடைய எண்ணங்கள். அவருடைய நூல்களில் இயேசுபற்றி அல்லது கிறிஸ்தவ
வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கும். கீதைபற்றிய
அவருடைய வியாக்கியான நூலிலும்கூட இயேசுவும் வேதவசனங்களும் இடையிடையே
மேற்கோள்களாகப் பிணைந்திருக்கின்றன.
யூத, கிரேக்கப் பின்னணியில் கட்டியிறுக்கப்பட்ட இயேசுவையும் தொடக்ககால
கிறிஸ்துவத்தின் இறையியல், கலாச்சாரத் தளத்தையும் இராதாகிருஷ்ணன்
விரிவுபடுத்தினார். அரிய ஈரானிய, இந்திய இறையியல் கருத்துத்
தாக்கங்களுக்கு வாய்ப்புண்டு என்றார். இயேசு உபதேசித்த சன்னியாச
வாழ்க்கை, பொருளாசைக்கு எதிரான போதனைகள், அவர் அறிவித்த அகிம்சை
வழிகளுக்கு யூதத்தில் முன்மாதிரிகள் இல்லை என்றார். ஏன் இயேசு தனக்குச்
சூட்டிக்கொண்ட மனித குமாரன் என்ற பெயரில்கூட ஆரியத் தொடர்பு இருக்கலாம்
என்றார். இதைச் சொல்லுவதற்கு சேர்மனிய அறிவாளர் Rudolph Ottoவின்
கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தினார்.
இராதாகிருஷ்ணன் கட்டுருவாக்கம் செய்த இயேசுவை, கிறிஸ்தவர்களால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர் இயேசுவை கடவுளின் மைந்தனாகப்
பார்க்கவில்லை. தெய்வமாக அல்ல தெய்வத் திறனுடைய ஒரு கீழைய மறைஞானியாகப்
பார்த்தார். வரலாற்றில் வாழ்ந்த இயேசுவைவிட வரலாற்றைக் கடந்த கிறிஸ்துவே
இவருக்குப் பெரி தாகப்பட்டது. இயேசுவையும் கிறிஸ்துவையும் ஒன்றாக்கி
குழப்பாதீர்கள் என்றார். கொள்கைப் பிடிவாதமற்ற, சமய நிறுவனத்தைத் தாண்டிய
இயேசுவை கிறிஸ்த வர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் சொன்னதைக்
கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் கிறிஸ்துவைக் களங்கப்படுத்தி விட்டார்
என்று கிறிஸ்தவர்கள் முணுமுணுத்தார்கள். இதற்குக் காரணம் அவர் இயேசுவின்
வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களான பிறப்பு, சிலுவை, மரணம்,
உயிர்த்தெழுதல் போன்றவற்றை சரித்திர நடப்புகளாகக் கணிக்காமல் தனிமனிதனின்
வாழ்வில் சம்பவிக்கும் முழு அகப்பிரதிபலிப்பு என்று வர்ணித்தார்.
இறப்பும் உயிர்த்தெழுதலும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நடந்த
சம்பவங்கள் அல்ல தினமும் மனித வாழ்வில் நேரிடும் காரியங்கள் என்றார்.
கடவுளுடைய இராச்சியம் உலகில் நிறுவப்படுவதில்லை, உங்களுக்குள்ளேயே
இருக்கிறது என்று லூக்கா பதிவு செய்த இயேசுவின் வார்த்தைகளைக் கோடிட்டுக்
காட்டினார்: ‘தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று பரிசேயர் அவரிடத்தில்
கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, தேவனுடைய ராஜ்யம்
பிரத்தியட்சமாய் வராது. இதோ இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லவும்
மாட்டார்கள். இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.’
இராதாகிருஷ்ணனுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து
வேறுபாட்டுக்குக் காரணம் இரு வரின் வேறுபட்ட பொருள் விளக்கவியல்
(hermeneutics) ஆரம்ப நிலையே. கிறிஸ்தவர்கள் மனிதன் பாவி,
வீழ்ச்சியடைந்தவன், சபிக்கப்பட்டவன், எனவே அவனை மீட்க வந்த இறைதூதர்
இயேசு என்றார்கள். ஆனால் இராதாகிருஷ்ணன் மனிதன் தீமையானவன் அல்ல; தெய்வ
நிலைக்குரிய தன்மை அவனுக்குள் இருக்கிறது என்றார். அத்துவைதத்தின்
பரிபூர்ண, அடிப்படை உண்மையான மனிதன் தெய்வீகமானவன் என்பது புதிய
ஏற்பாட்டில் இயேசு கூறிய வாசகத்தில் இருக்கிறது என்று நினைவூட்டினார்:
‘‘ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல,
நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்’’. இயேசுவை இராதாகிருஷ்ணன்
கிட்டத்தட்ட ஒரு உபநிடத வேதாந்திபோல் சித்திரித்திருந்தார். அவருடைய
திருப்புதல் வாசிப்பில் புத்தரும் மகாவீரரும் உபநிடதத்துடன்
இணைந்துபோகும் வேதகாலத்து மறைஞானிகள் போல்தான் காணப்பட்டார்கள்.
இரத்தசோகை பீடித்த இந்துமதத்தைப் பழம்பெரும் பண்பாட்டின் அஸ்திவாரத்தில்
நிலைநிறுத்தி, புத்துயிரும் புதுமலர்ச்சியும் கொண்ட நவீன
இந்துதேசியத்திற்கு உகந்த கருவியாக உருமாற்றினார். ஒருவிதத்தில் இவர்
கட்டுமானம் செய்த இந்துமதம் இந்தியர்களுக்கு அல்ல, வெள்ளையர்களுக்கே.
அவர் களுக்கே அறிவார்ந்த, நேர்மையான, திட்பநுட்பத்திறமான, செயல்முறையான
ஆரிய சாஸ்திரிய இந்து மதத்தைச் சீரமைத்துக்கொடுத்தார். எத்தனை
புத்தகங்கள் எழுதினாலும் அத்துவைத வேதாந்தம் என்ற ஒரே கருத்துப்படிவம்
மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் வலியுறுத்தப்பட்டது.
இராதாகிருஷ்ணனின் பிரபலமான, செல்வாக்கான, திராணியான நூற்கள் காலனிய
காலத்தில் எழுதப்பட்டவை. இந்தப் பட்டியலைப் படியுங்கள். நான் சொல்லுவது
உறுதியாகும்: The Reign of Religion in Contemporary Philosophy (
1920),Indian Philosophy: 1 & 2 (1923, 1927), The Hindu View of Life
(1927), The Hindu View of Life (1927), An Idealist View of Life
(1929), My Search for Truth (1937) East and West in Religion, 1933.
Freedom and Culture. Madras: G.A. Natesan & Co., 1936. The Heart of
Hindusthan. Madras: G.A. Natesan & Co., 1936. Eastern Religions and
Western Thought. London: Oxford University Press, 1939. இவற்றைப்
படிக்கும்போது பின்காலனிய கருத்தாக்கத்தில் இவை திருப்பி எழுதப்பட்டவை
(writing- back), திருப்பிப் பேசுதல் என்ற வகையைச் சேர்ந்தது என்று
எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இராதாகிருஷ்ணனின் எழுத்துகள் வழமைபோல்
ஆளப்படுபவர் ஆள் பவருக்கு எதிரான திட்டுகள், வசைகள், பழியுரைகள் அல்ல.
மென்மையானவை, மரியாதையானவை. மிருதுவான, மெல்லிழைவான எழுத்தாண்மைக்குக்கூட
மேலாதிக்கக் கருத்துகளைக் குலைத்து விட, கவிழ்க்க, தடுமாறச்செய்யும்
வல்லமை உண்டு என்பதற்கு இராதா கிருஷ்ணன் பலமான எடுத்துக்காட்டு.
இவருடைய எழுத்துகளில் ஒரு தாராளத்தன்மையும் திறந்த மனப்போக்கும்
காணப்படுவதுபோல் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஊன்றிப்படித்தால் தெரியவரும்
செய்தி வேறு. எல்லாச் சமயத்தவரையுமே ஒரே கருத்துக்குள் கொண்டுவர
முயலக்கூடாது என்று இவர் சொன் னாலும் இறுதியில் பல சமயக் கருத்துகளும்
அத்துவைத வேதாந்தத்திலேயே பூரணமடைகிறது என்றார்.
இவரின் நூல்களைப் படிப்பவர் களுக்கு கிழக்கு – மேற்கு என்ற ஒரு எளிய
எதிரிணைகளை இராதா கிருஷ்ணன் பிரதிபடுத்துவது மட்டுமல்ல அவற்றை நீடிக்கச்
செய்கிறார் என்று தெரியவரும். கிழக்கு ஆன்மீகமானது, மேற்கு அறிவார்ந்தது,
கிழக்கு உள்ளுணர்வானது, மேற்கு தர்க்கரீதியானது என்ற எதிரீடுகள்
கீழைத்தேசவாணர்கள் செய்த மூல முதலான பாவமாகும்; இதன் தொடர்ச்சிகளை
இராதாகிருஷ்ணனின் எழுத்துகளிலும் காணலாம். ஆன்மீகமே இந்தியாவின்
சாராம்சம் என்றார், இந்தியாவில் தோன்றிய உலோகாயுதத்தை ஏதோ எபோலா போல ஒரு
பெரிய அழிவுசக்தி என்று தவிர்த்துவிடுகிறார். ஆயிரம் பக்கங்களுக்கு மேலான
இரண்டு தொகுதி நூலான ‘Indian Philosophy’ இல் பொருள்முதல்வாதத்துக்கு
இவர் ஒதுக்கிய பக்கங்கள் பதினைந்து.
ஆனால் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் தொகுத்து எழுதிய ‘அத்துவைத
தத்துவம்‘ எவ்வாறு நம் காலத்துக்குப் பொருத்தமானது என்பதில்
இராதாகிருஷ்ணனின் எழுத்துகளில் அதிகம் விளக்கம் இல்லை. அரசின் கொள்கையிலோ
அல்லது இந்தியாவின் வெளி நாட்டு நடத்தைகளிலோ தனி ஆன்ம இயலான,
உள்ளியல்புக்குரிய வேதாந் தம் எப்படிப் பொதுவெளியில் வழிகாட்டியது என்ற
தடயங்கள் இல்லை. இவர் கட்டுருவாக்கிய இந்துசமயம்கூட ஒருபாதிதான்
உண்மையானது; சகிப்புத்தன்மை இந்துமதத்தின் சாரமாக இருந்தாலும்
சண்டித்தனமும் மற்றைய மதங்கள் போல் இந்துமதத்திற்கும் உண்டு.
துடிப்புள்ள இன்றைய இந்தியா வில் எல்லாச் சமயக் கருத்துகளையும் உறிஞ்சி,
உட்கிரகித்து இராதா கிருஷ்ணன் உருவாக்கிய தேசிய அத்துவைத வேந்தாந்தம்
(இது முத்துமோகனின் பதம்) ஒரு பயனுள்ள ஏன் ஒரு துட்ட கருவியாக மாறலாம்.
ஆனால் ஒரு சமயத்தின் தொல்பழமையின் பண்புத்தரம் அல்ல; தொடர்ந்து
நிலைத்திருக்கும் அதன் வீரிய ஆற்றல்தான் முக்கியம் என்பதில்
இராதாகிருஷ்ணன் உறுதியாக இருந்தார். சமயத்தை நாட்டுப் பற்றுக்கு
உபயோகிப்பதில் இவருக்கு உடன்பாடு இல்லை. முதலாம் உலகப்போரில் கிறிஸ்தவ
திருச்சபை மேற்கு நாட்டு அரசுகளுக்குக் காட்டிய ஆதரவை அவருடைய ‘The Reign
of Religion in Contemporary Philosophy’ என்ற நூலில் கடுமையாக
எதிர்த்தார். இராதாகிருஷ்ணனின் இந்த எண்ணங்கள் இந்துத்துவவாதிகளுக்கு
ஆறுதலான செய்திகள் அல்ல. அது மட்டுமல்ல பழம்பிரதிகளை நேர்ப் பொருளாக
(றீவீtமீக்ஷீணீறீ) வாசிப்பதில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தில்
இராதாகிருஷ்ணன் விலகிக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
பின்காலனியக் கருத்தாடலில் ஆள்பவரை எதிர்க்கும் ஆளப்படுபவர்கள் தங்களை
ஆட்டிப் படைப்பவர்களின் காலனியப் பழக்கவழக்கங் களைப் பிரதிபலிப்பதுண்டு
என்று அல்ஜீரிய காலனிய சிந்தனையாளர் ஃபிரான்ட்ஸ் ஃபனான் (Frantz Fanon)
எழுதியிருக்கிறார். எந்த கிறிஸ்தவ மதகுருமாரின் இறையியல் காலனியத்தை
எதிர்த்தாரோ அதையே அதாவது, அவர்களின் காலனிய உத்வேகங்களை, உட்கருத்துகளை
இராதாகிருஷ்ணனும் அவருடைய எழுத்துகளில் திருப்பிச் செயல்படுத்தினார்.
கிறிஸ்தவ காலனியத்திற்குப் பதிலாக அத்துவைத வேதாந்த காலனியத்தைப்
பரப்புரை செய்தார். உளவியல்ரீதியாக ஆளப்படுகிறவர்கள் ஆள்பவர்களாக மாறி
விடுவதுண்டு. அவர்களது ஆசைகள், தேடல்கள் காலனியவாதிகளின் வடிவம்கொள்ளத்
தொடங்குகின்றன. தாங்களே தங்களைப் ‘பிறராகக்’ காண்பதுண்டு. இராதா
கிருஷ்ணனின் பொருள் விளக்கங் களைப் படிக்கும்போது அவர் அடிக்கடி
வணக்கத்துடன் யாசிக்கிற வேதவசனம் நினைவுக்கு வருகிறது: ‘‘நீயே
அதுவாகிவிட்டாய்’’.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s