ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்

வந்துதித்தாய் ஸ்ரீ ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளைச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 1

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 2

போர்புரிந்து மதுகைடைத் தமையழித்தான் உளத்துணியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் [2] 3

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இங்குக்கலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் 4

தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவிக்க
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய் 5

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த யாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய் 6

நன் கமுகு தென்னைகளில் பாளை மனம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பணித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீர பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் 7

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் தீர்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் 8

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்தும் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய் 9

வெண்கமல ஒன்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய் 10

கனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவலைகள் ஒலியெழுப்ப
மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய் 11

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளை காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெறிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய் 12

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலக மனைத்தினொடும் இழைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 13

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோலேறி திருநீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் 14

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் 15

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளராய் வேங்கடவா எழுதருள்வாய் 16

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாத நடை முதலாய
திருநடைகள் சிறப்புணர்ந்து திருத்தமுற கற்பதற்கு
கருட சிம்ம நா தருளான் வேங்கடவா எழுதருள்வாய் 17

சூரியனார் சந்திரனார் செவ்வாய் புதன் வியாழ
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுதருள்வாய் 18

நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகலைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய் 19

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய் 20

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை புனைக் கடலே
தின்புயத்துக் கருடனுடன் நாதனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களின் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோ தனிப் புகழே வேங்கடவா எழுந்தருள்வாய் 21

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைக்குண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போலருல்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய் 22

திருமகள் தன் திருயணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய் 23

மச்சநாதா கூர்மநாதா வராக நாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியணே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் 24

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய் 25

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புல்லினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்கலங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய் 26

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்கலமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ் கொடிகள் ஏந்தினர்காண்
தே மரு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய் 27

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்துட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திரு தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய் 28

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 29

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s